டிராக்மேன்களை பாதுகாக்க ‘ரக்சக்’ வயர்லெஸ் கருவி திட்டம்

தென் மத்திய ரயில்வே போன்று தெற்கு ரயில்வேயிலும், டிராக்மேன்களைப் பாதுகாக்க, ’ரக்சக்’ என்ற வயர்லெஸ் கருவி வழங்கும் திட்டம் அமல்படுத்தவேண்டும் என, ரயில் தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

தமிழ்நாடு, கேரளா மாநிலங்களிலுள்ள ரயில்வே கோட்ட அலுவலகங்கள் தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் செயல்படுகின்றன. தமிழகத்தில் சென்னை, சேலம், திருச்சி, மதுரை ஆகிய ரயில்வே கோட்டங்கள் செயல்படுகின்றன.


தமிழகம் முழுவதும் ரயில் தண்டவாளங்களைப் பராமரிக்கும் டிராக்மேன்கள், மற்றும் தண்டவாளத்தில் சென்று பரி்சோதிக்கும் டிராலி ஊழியர்கள் என, சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அந்தந்த ரயில் நிலையங்களுக்கான டிராக்மேன்கள், அவர்களுக்கென ஒதுக்கிய பாதையில் தினமும் பராமரிப்புப் பணியில் ஈடுபடுவர். சில நேரத்தில் ரயில் வருவதை அறியாமல் பணியில் தீவிரம் காட்டும்போது, ரயில்களில் அடிபட்டு, டிராக்மேன்கள் இறக்கும் சூழல் நடக்கிறது.

இதுபோன்ற சூழலில் ஊழியர்களின் உயிரிழப்பைத் தடுக்க, ‘ரக்சக் ’ எனும் வயர்லெஸ் கருவி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, தெற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்துள்ளன. தென் மத்திய ரயில்வேயில் இத்திட்டம் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைந்து, தெற்கு ரயில்வேயிலும் அமல்படுத்தவேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து டிஆர்இஎம் தொழிற் சங்க கோட்ட செயலர் சங்கர நாராயணன் கூறுகையில், ''ரயில்வே பிற துறைகளைவிட, தண்டவாளங்களைப் பராமரிக்கும் ஊழியர்களின் பணி என்பது முக்கியம். சில நேரங்களில் இவர்களுக்குப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறி. ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் இடையில் குறிப்பிட்ட தூரத்தில் தண்டவாளத்தில் பராமரிப்புப் பணியின் போது, ரயில்கள் வருவது தெரியாமல் உயிரிழப்பு நேரிடும். இது போன்ற உயிரிப்பைத் தடுக்க, தென் மத்திய ரயில்வேயில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பே ‘ ரக்சக் ’ எனப்படும் வயர்லெஸ் கருவிகள் டிராக்மேன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இக்கருவிகள் ஒவ்வொரு ரயில் நிலையத்திலுள்ள வழித்தடம் இணையத்தில் இணைக்கப்படுகிறது. குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்படும்போது, அந்த வழித்தடத்தில் பணியிலுள்ள டிராக்மேன்களுக்கு மஞ்சள் நிறத்தில் சிக்னல் கிடைக்கும். இதைத் தொடர்ந்து அவர்கள் டிராக் பணியில் இருந்து வெளியேறுவர். ரயில்கள் அவ்விடத்தை கடந்த பிறகே மீண்டும் பணியில் ஈடுபடுவர். இத்திட்டத்தால் உயிரிழப்பு தடுக்கப்படுகிறது.

தெற்கு ரயில்வேயிலும் டிராக்மேன்கள் பாதுகாப்பு கருதி, ‘ரக்சக்’ கருவி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஏற்கெனவே, எங்களைப் போன்ற தொழிற்சங்கங்களும் இத்திட்டத்தை அமல்படுத்தவேண்டும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

ரயில்வே ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்றுதல் குறித்த சிறப்புக் கமிட்டியும் இது பற்றி சிபாரிசு செய்துள்ளது. மத்திய ரயில்வே வாரியம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.


No comments

Powered by Blogger.