ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுமி சடலமாக மீட்பு

அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் சிறுமி 16 மணி நேரத்திற்கு பின்னர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில், தன் வீட்டிற்கு வெளியே நேற்று மாலை விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஷிவானி, அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டாள்.

சம்பவ இடத்துக்கு வந்த  பொலிஸார் மற்றும் தீயணைப்பு  வீரர்கள்,  தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் சிறுமியை மீட்கும் பணியை தொடங்கினர். 

ஆழ்துளை கிணற்றுக்குள் ஒக்சிஜன் செலுத்தப்பட்டு, குழந்தையின் உடல்நிலையை கேமரா மூலம் கண்காணித்தனர். சிறுமி தலைகீழாக ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்திருந்தமை தெரியவந்தது.

50 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றின் அருகே, பொக்லைன் இயந்திரம் மூலம் சிறுமி இருக்கும் ஆழம் வரை பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் பக்கவாட்டில் சுரங்கம் தோண்டப்பட்டு இன்று காலை 9.30 மணியளவில் சிறுமியை மீட்டனர்.

மீட்கப்பட்ட  சிறுமியை  உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். 

சுமார் 16 மணி நேரம் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருந்த சிறுமி, 10 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டும் குழந்தையை காப்பாற்ற முடியாத நிலைமை அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆழ்துளைக் கிணற்றை மூடாமல் பெற்றோர் அலட்சியமாக இருந்ததால் சிறுமி உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

”தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டு சில மணி நேரங்களில் குழந்தையை மீட்டுள்ளனர். ஆனால், குழந்தையின் பெற்றோர் ஆழ்துளைக் கிணற்றை மூடாமல் அலட்சியமாக விட்டதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது” என  அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர்  கல்யாண் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.