யாருக்கும் எமது ஆதரவு இல்லை - பொதுபல சேனா

சிங்கள பௌத்த மக்களின் பிரச்சினைகளை அடையாங்கண்டு கொள்ளாததினால் இம்முறை இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காமலிருப்பதற்கு பொதுபல சேனா அமைப்பு தீர்மானித்துள்ளது.

கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபலசேனா அமைப்பின் தலைமையகத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவத,

நாங்கள் ராஜபக்சவினரால் உருவாக்கப்பட்டவர்கள் அல்லர். 2015ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்தோம். எனினும் சிங்கள பௌத்த மக்களுக்காக அந்த முடிவை எடுத்தோம்.

இன்று கோத்தபாய ராஜபக்சவின் சட்டத்தரணியான அலிசப்ரி, அண்மையில் ஆற்றிய உரையொன்றில், பொதுபல சேனா அமைப்பு அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆலோசனைப்படி செயற்படுவதாக கூறியிருப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும்.

அவர் இனவாதத்தை உருவாக்க முயற்சிக்கின்றார். பொதுபலசேனா அமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுன போன்ற எந்தவொரு கட்சிகளுக்கும் சாதகமாகவோ, அவற்றுக்கு அனுசரணை வழங்கும் விதமாகவோ செயற்படவில்லை.

அத்தோடு நாம் எந்தவொரு முஸ்லிம் பள்ளிவாசலுக்கும் தாக்குதல் நடத்தவில்லை. எந்தவொரு வன்முறைச் சம்பவங்களுக்கும் காரணகர்த்தாவாக செயற்படவில்லை.

 உண்மையில் எமது நாட்டிலுள்ள அனைத்து சிங்களவர்களையும் ஒன்றுதிரட்டி, சிங்கள அரசை வலிமைப்படுத்தும் அதேவேளை, ஏனையோரும் வாழத்தகுந்த நாடொன்றைக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே பொதுபலசேனா அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

தற்போது முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டார் அவர்கள் செல்வதற்கு வேறு நாடுகள் இருக்கின்றன.

ஆனால் எம்மைப் பொறுத்தவரையில் நாம் பூகோள ரீதியில் சிறுபான்மை இனத்தவராக இருக்கின்றோம். எனவே எமக்கென இருக்கின்ற இந்த நாட்டைப் பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும்.

சிங்கள பௌத்த மக்களின் பிரச்சினைகளுக்கு எந்த வேட்பாளர்களும் இம்முறை சரியான தீர்வை முன்வைக்கவில்லை. ஆகவேதான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் சுயாதீனமாக இருப்பதற்கு தீர்மானித்துள்ளோம்-என்றார்.


No comments

Powered by Blogger.