திருக்கேதீச்சர விவகாரம் வழக்கு ஒத்தி வைப்பு

மன்னார் திருக்கேதீச்சர ஆலய வளைவு உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்றுமன்னார் மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.அப்துல்லா   முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. 

குறித்த வழக்கு விசாரணை தொடர்பாக திருக்கேதீச்சரம் ஆலய நிர்வாகத்தினருக்கு சார்பாக வழக்கில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

திருக்கேதீச்சர ஆலய வளைவு உடைப்பு  வழக்குகள் மன்னார் நீதவான் நீதி மன்றத்திலும், மன்னார் உயர் நீதி மன்றத்திலும்  நடைபெற்றது. 

வழக்குகளுக்கான பின்னனி  திருக்கேதீச்சர ஆலய வளைவு ஒரு சமய தரப்பினரால் இடித்து வீழ்த்தப்பட்டிருந்தது. அது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டு அதனை செய்தவர்கள், அங்கு நந்திக் கொடியை மிதித்தவர்கள் போன்றோருக்கு எதிராகவும் வழக்கு   தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மற்றையவர்கள் திருக்கேதீச்சர ஆலய நிர்வாகக் குழுவிற்கு எதிராக  அனுமதியில்லாமல் நுழைவாயில் வளைவைக் கட்டினார்கள் என்று இன்னுமொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த இரு வழக்குகளும் நேற்று நீதவான் நீதிமன்றத்தில் விசாரனைக்காக எடுக்கப்பட்டது.

திருக்கேதீச்சர நிர்வாக குழு சார்பாக நான் முன்னிலையாகி இருந்தேன். அதில் பொலிஸார் இன்னும் விசாரணைகளை முடிக்கவில்லை என்பதனாலும், தேர்தல் தொடர்பில், விசேட சேவைக்கு சென்றிருப்பதாகக் கூறியதாலும்  பிற் போடப்பட்டுள்ளது.

சில நாள்களுக்கு முன்னதாக  இந்த நுழைவாயில் வளைவு மீண்டும் செய்யப்படக் கூடாது என்று கோரி மாந்தை கிறிஸ்தவ ஆலயத்தின் நிர்வாகக் குழுவினர் எழுத்தாணை மனு ஒன்றை மேல் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்கள்.

 அதில் 23 ஆவது எதிர் மனு தாரராக திருக்கேதீச்சர ஆலயத்தின் இணைப்புச் செயலர் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
 அது சார்பாக நான் மேல் நீதிமன்றத்தில்  முன்னிலையானேன். அவருடைய பெயர் மனுவில் குறிப்பிடப்படவில்லை. பூர்வாங்க ஆட்சேபனையை நான் எழுப்பியிருந்தேன்.

நீதி மன்றத்திலே வழக்குத்  தாக்கல் செய்யப்படும்போது  அவர் சட்ட நபராக இருக்க வேண்டும் அல்லது சாதாரண நபராக இருக்க வேண்டும்.

பதவியை மட்டும் குறித்து ஒருவரை தரத்தாரகராக அறிவிக்க முடியாது.  அப்படி அறிவிக்கக்கூடிய ஒரே ஒரு விதி விலக்கு பொதுச் சேவையில் இருக்கின்ற உத்தியோகத்தருக்கு மட்டும்தான்  உள்ளது என்று மேல் நீதிமன்றத்தின் விதிகளை மேற்கோள் காட்டி  நான் சமர்ப்பணங்களை செய்திருந்தேன்.

மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அரச குணரெட்ண அதனை ஏற்றுக் கொண்டு மனுவை திருத்துவதற்கு  அனுமதியை கோரினார்.

மனுவை திருத்த முடியாது என்றும் மனுவில் உள்ள குறைபாட்டை இனி நிவர்த்தி செய்ய முடியாது என்றும்  இந்த முதல் நிலை மனுவை வைத்தே மனு  நிராகரிக்கப்பட வேண்டும்  என்று நான் சமர்ப்பணம் செய்ததை அடுத்து  மனுவை திருத்தவதற்கு  நீதிமன்றம் அனுமதி அளிக்க முடியுமா? இல்லையா? என்ற கேள்வி தொடர்பில் எழுத்து மூல சமர்ப்பணங்களைக் கொடுக்குமாறு  மேல் நீதிமன்ற நீதிபதி கேட்டுள்ளார்.

அடுத்த தினத்தில் நாங்கள் எழுத்து மூல சமர்ப்பணங்களை கொடுப்போம். அதன் பின்னர் இந்த வழக்குத் தொடர்ந்தும் இருக்கமாக இருந்தால் எங்களது முழுமையான ஆட்சேபனைகளை நாங்கள் தெரிவிப்போம். 

அதிலும் வேறு பல ஆட்சேபனைகளையும் எழுப்பவதற்கு நாங்கள் தயாராகவிருக்கிறோம்-என்றார்.

குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.No comments

Powered by Blogger.