சுயலாபத்துக்காய் கோட்டை விட்ட தமிழ்த் தலைமைகள்

தமிழ்த் தலைமைகள் கிடைத்த சந்தர்பங்களை சுயலாப அரசியலுக்காகக் கோட்டை விட்டு விட்டார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா.  

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முதலாவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார் அவர் தெரிவித்ததாவது,

தமிழ் மக்கள் எதிர் நோக்கிவரும் பிரச்சினைக்குத் தீர்வாக வர இருக்கும் ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் எங்கள் மக்கள் பல தேர்தல்களை எதிர் நோக்கியிருக்கிறார்கள். ஒரு காலத்தில்  நாங்கள் ஆயுதம் தூக்கிப் போராடி இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு ஜனநாயக வழிமுறைக்கு ஊடாக நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஊடாக எங்களுடைய பிரச்சினையைத்  தீர்க்கலாம் என்ற நம்பிக்கையுடன் அந்த கருத்தை முன்வைத்து வந்திருக்கின்றோம். 

ஆனால் அன்று சக தமிழ் கட்சிகளோ, சக இயக்கங்களோ இல்லை வன்முறைக்கு ஊடாகவே பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று கூறினார்கள். ஆனால் நாங்கள் வன்முறையின் ஊடாக பிரச்னையை தீர்க்க முடியாது என்று கூறியிருந்தோம். 

தேசிய நல்லிணக்கத்திற்கு ஊடாக தமிழ் மக்களின் வாக்குபலத்தின் ஊடாகவே வருங்காலங்களில் எங்களுடைய பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று அன்று கூறியிருந்தோம். அது இன்று ஜதார்த்தமாக வந்துள்ளது. 

அன்று நாங்கள் கூறியிருந்ததை ஏற்றிருந்தால் அழிவுகள், இழப்புக்கள், துன்பங்கள், துயரங்கள், இடப்பெயர்வுகள் எல்லாம் ஏற்பட்டிருக்காது. எங்களுக்கு கிடைத்த சந்தர்பங்களைத் தமிழ் தலைமைகள் சுய இலாப அரசியலுக்காக கோட்டை விட்டு விட்டார்கள். 

யுத்தத்தின் பின் நடைபெற்ற தேர்தல்களில் வேட்பாளர்களாக வந்தவர்களும் அவர்களை ஆதரித்து மக்களை உசுப்பேத்தி மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்கு வந்தவர்களும்தான் வென்றிருக்கிறார்களே ஒழிய மக்கள் வெல்லவில்லை. 

மக்கள் வெல்லவில்லை என்பதன் அர்த்தம் மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டால் தான் மக்கள் வென்றதாக அர்த்தம். வர இருக்கின்ற சந்தர்ப்பத்தில் எங்களை நம்பி எங்களை பின்பற்றி எங்களுடன் அணிதிரள்வீர்களேயானால் நீங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்னைகளை விரைவாக தீர்ப்போம்-என்றார்.



No comments

Powered by Blogger.