மீரா மிதுன் மீது போலீஸ் வழக்குப் பதிவு

காவல் துறையை இழிவாகப் பேசி, ஹோட்டல் அலுவலரை மிரட்டியதாக நடிகை மீரா மிதுன் மீது எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சர்ச்சைக்கும் பரபரப்புக்கும் பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். இவர் சமீபத்தில் தனியார் ஓட்டல் ஒன்றில் அளித்த பேட்டியில் காவல் துறையை இழிவாகப் பேசி மிரட்டல் விடுத்தார். காவல் துறை குறித்து பேட்டி அளித்த அவர், சட்ட நிபுணர்போல் எப்.ஐ.ஆர் குறித்துப் பேசினார். முதலில் முழுமையாக விசாரணை நடத்திய பின்னரே எப்.ஐ.ஆர் போடவேண்டும் என்று மீரா மிதுன் பேசினார்.

''என் மீது பல எப்.ஐ.ஆர்கள் போடப்பட்டன. அதை நான் முன்ஜாமீன் வாங்கி ரத்து செய்தேன். ஆனாலும் மேலும் மேலும் என் மீது எப்.ஐ.ஆர் போடுகிறார்கள். சிலர் கொடுக்கும் லஞ்சத்தை வாங்கிக்கொண்டு தமிழ்நாடு போலீஸார் என் மீது பொய் வழக்குகள் போடுகின்றனர். பணம் கொடுத்தால் யார் மீது வேண்டுமானாலும் பொய் வழக்கு போடுவார்கள். 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் உங்கள் மீதுகூட பொய் வழக்கு போடுவார்கள்'' என செய்தியாளர்களிடம் மீரா மிதுன் தெரிவித்தார்.

மேலும், இதை உயர் அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு செல்ல உள்ளதாகவும் மீரா மிதுன் தெரிவித்தார். அதன் மூலம் என்மீது வழக்கு போட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் அல்லது டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்றும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் மீரா மிதுன் பேசினார்.

இதுகுறித்து ஹோட்டல் அலுவலர் அருண் (27) என்பவர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் மீது போலீஸார் நடிகை மீரா மிதுன் மீது பிரிவு 294 (பி) (பொது இடத்தில் அவதூறாக, இழிவாகப் பேசுதல்) 506(1)( கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் இதேபோன்று நடந்துகொண்டதால் மீரா மிதுன் மீது இதே பிரிவின்கீழ் எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ''தமிழ்ச்செல்வி @ மீரா மிதுன் ( Miss Tamil Nadu ) என்பவர் மீது எழும்பூர் சட்டம் ஒழுங்கில் 294(b) , 506(l) IPC பிரிவின் கீழ் 26-8-19 வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மீரா மிதுன் கடந்த 3-ம் தேதி பிற்பகல் எழும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரேடிசன் ப்ளு என்ற ஹோட்டலில் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ளார் .

அதில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை தரக்குறைவாகப் பேசியதாகவும் அதைக் கேட்ட ஓட்டல் ஊழியரை அசிங்கமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார்தாரர் அருண் (27) ஹோட்டல் அலுவலர். வழக்குப் பிரிவு 294(பி), 506(1)’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.