அமெரிக்காவிலிருந்து இறக்குமதியானவர் கோத்தபாய

மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின் அமெரிக்காவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டவர் தான் கோத்தபாய ராஜபக்ச இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை, பகுதியில், இடம்பெற்ற தேர்தல் பரப்பரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது, 

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி ஆனதும் அமெரிக்காவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டவர் தான் கோத்தபாய ராஜபக்ச.

அவர் பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்படும்போது இலங்கை பிரஜை கூட இல்லை. தான் ஒரு இலங்கைப் பிரஜை என்று ஒரு ஆவணத்தை சமர்ப்பித்திருக்கிறார்.

அந்த ஆவணம் போலியானது என்று குற்றப்புலனாய்வுத் துறையினர் நீதவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

தொடர்ந்து இரட்டை பிரஜையாக இருந்து வந்த கோத்தபாய ராஜபக்சவுக்கு ஜனாதிபதி ஆசை வந்த பின் அமெரிக்க பிரஜாவுரிமை துறப்பதாக ஆவணம் ஒன்றைக் காட்டினார்.

நேற்று முன்தினம் மூன்றாவது காலாண்டுக்கு உரிய அமெரிக்க பிரஜாவுரிமையை துறந்தவர்களுக்கான பெயர் பட்டியல் வெளியானது. இதில் அவர் பெயர் இடம்பெறவில்லை.

இதில் பிரதானமாக இரு கேள்விகள் எழுகின்றன. கோத்தபாய ராஜபக்ச இலங்கை பிரஜாவுரிமையை சரியாகப் பெற்றுக்கொண்டாரா? அமெரிக்க பிரஜாவுரிமையை உண்மையிலேயே துறந்தாரா?

கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராகவிருந்த காலகட்டத்தில்தான் போர் உச்சகட்டத்தில் நடந்தது. இதுவரை போரை நடத்தி யுத்த வெற்றி பெற்று தந்தது தான் என்று ஒரு புத்தகமே எழுதப்பட்டிருக்கிறது.

இதுநாள் வரைக்கும் தனக்கு கிடைத்த புகழ் என்று மார் தட்டியவர். சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஏன் என்னிடம் கேட்கிறீர்கள், இராணுவத் தளபதியிடம் கேளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறியதை நாம் பார்த்தோம். போர் காலத்தில் இவ்வாறான அட்டூழியங்கள் நடந்தது என்பது எங்களுக்கு தெரியும்.

என்ன விதமாக போரை வழி நடத்தினார்கள் என்பதை எங்களது மக்கள் நான் நன்கறிவார்கள்.

ஆங்கிலத்தில் வெள்ளை வேன் கடத்தல் என்பது ஆங்கிலத்தில் ஒரு சொற்பதமாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த அளவிற்கு வெள்ளை வான் விடயம் பிரபலமாகியுள்ளது.

கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராக இருந்த காலத்தில்தான் காணி அபகரிப்பு, இளைஞர்கள் துன்புறுத்தப்பட்டமை குறித்து ஒரு ஆவணம் இருக்கிறது.

தமிழ் மக்கள் குறித்து கோத்தபாய  தேர்தல் வரைபில் எதுவும் குறிப்பிடவில்லை. இந்த நாட்டில் தமிழ்த் தேசியப் பிரச்சினை ஒன்று இருப்பதாகக் கூட அவர் காட்டிக்கொள்ளவில்லை.

அதற்கு ஒரு படி மேலாக சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் வெற்றி பெற்றுக் காட்டுவேன் எனக் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோத்தபாய ராஜபக்சவுக்கு முடிந்தால் வெற்றி பெற்று காட்டுங்கள் என சவால் விடுத்து இருக்கிறார்.

தமிழ்த் தேசியம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நிதானித்து கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்க முடியாது என முடிவைச் சொல்லி இருக்கிறது-என்றார்.


No comments

Powered by Blogger.