வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ; சூறாவளியாக மாறலாம்

நாட்டில் தொடரும் மழையுடனான வானிலை தற்காலிகமாக இன்று குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்  அறிவித்துள்ளது.

இருப்பினும் சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் காணப்படுகின்றது.

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களின் சில பகுதிகளில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கிழக்கு - மத்திய மற்றும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிலும் அந்தமான் கடற்பரப்பிலும் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேச நிலை ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து வட அகலாங்கு 13.3N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 88.9E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடைந்து மேற்கு - வடக்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

இது அடுத்த 48 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக மேலும் விருத்தியடைந்து மேற்கு - வடக்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


No comments

Powered by Blogger.