கடல் நீரால் ஆபத்து ; எச்சரிக்கிறார் ஐ.நா. செயலர்

கடல் மட்டம் உயர்ந்து செல்வதால் இந்தியா, வங்காளதேசம், ஜப்பான், சீனா ஆகிய நாடுகள்  மிக மோசமாகப் பாதிக்கப்படும் என்று ஐ.நா. பொதுச் செயலர் ஆண்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

பாங்காக்கில் இடம்பெற்றுவரும் ஆசிய நாடுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள ஐ.நா. பொதுச் செயலர் ஆண்டோனியோ குட்டரெஸ் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்ததாவது,

2050 ஆம் ஆண்டுக்குள் உலகில் 30 கோடி மக்கள் கடல் நீரால் பாதிக்கப்படுவார்கள் என  ஆய்வு எச்சரித்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் கணிக்கப்பட்டதைவிட வேகமாக உயர்ந்துவருகிறது. அரசுகளின் நடவடிக்கைகளைவிட பருவநிலை மாற்றம் வேகமாக இருப்பதுதான் இதற்குக் காரணம்.

தென்கிழக்கு ஆசியா தான் மிகவும் பாதிக்கப்படும் பகுதியாக உள்ளது. இந்தியா, வங்காளதேசம், ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் கடல் மட்டம் உயருவதால் மிகவும் பாதிக்கும். 

தாய்லாந்து மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் கடல் வெள்ளத்தால் பாதிக்கப்படுவார்கள். தற்போதைய நிலையில் பூமிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல் இது.

விஞ்ஞானிகள் சொல்வதை கடைபிடிக்க வேண்டிய தேவை உள்ளதை அரசுகள் மற்றும் உள்ளூர் நிர்வாகங்களுக்கும், மக்களுக்கும் ஐ.நா. கவலையுடன் கவனத்துக்கு கொண்டு வருகிறது. 

நிலத்திலிருந்து எடுக்கப்படும் எரிபொருள்களுக்கு மானியம் வழங்குவதை நிறுத்த வேண்டும். நிலக்கரியைப் பயன்படுத்தும் புதிய அனல் மின்நிலையங்கள் நிறுவுவதை நிறுத்த வேண்டும்-என்றார்.


No comments

Powered by Blogger.