கட்சியின் முடிவை மீறியவர்கள் மீது நடவடிக்கை

கட்சியின் தலைமைக்குழு எடுத்த முடிவிற்கு மாறாக தீர்மானம் நிறைவேற்றியவர்கள் மீதும் அதற்கு ஆதரவாக செயற்படும் கட்சி அங்கத்தவர்கள் மீதும் கட்சியானது யாப்பு விதிகளிற்கமைவாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என்று  தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் இன்று ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட கிளையினால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சியின் தலைமைகுழு எடுத்த தீர்மானத்தை நிராகரிப்பதாகவும் சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவினை தெரிவித்து முடிவெடுத்து இதனை ஊடக அறிக்கையாக வெளியிட்டுருப்பதையும் அறிந்து கவலை கொள்கிறோம். 

ரெலோ தலைமை குழு எடுத்த தீர்மானம்  கட்சியின் உறுதியான இறுதி முடிவாகும். இதில் எந்த வித மாற்று கருத்திற்கும் இடமில்லை. கட்சியின் இறுதித் தீர்மானத்தை உதாசீனபடுத்தி, நடைமுறைப்படுத்த தவறும் யாழ் மாவட்ட குழுவின் முடிவு எமக்கு மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரத்தினை கடந்த 01-09அன்று திருகோணமலையில் நடந்த கூட்டத்தின் போது கட்சியின் பொதுக்குழு,  தலைமை குழுவிற்கு ஏகமனதாக வழங்கியிருந்தது. 

அதன் பிரகாரம் கடந்த 06-11 வவுனியாவில் நடைபெற்ற தலைமைகுழு கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முண்ணனியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என நீண்ட நேர விவாதத்தின் பின்னர் முடிவெடுக்கப்பட்டது. 

அதன் பிரகாரம் சஜித் பிரேமதாசவை வெற்றிபெற செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்சிக்கட்டுப்பாட்டை மீறி தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதற்கு யாழ் மாவட்ட குழு எடுத்த முடிவானது ஏற்றுக்கொள்ளகூடியதல்ல. 

கட்சியின் தலைமைகுழு எடுத்த முடிவிற்கு மாறாக தீர்மானம் நிறைவேற்றியவர்கள் மீதும் அதற்கு ஆதரவாக செயற்படும் கட்சி அங்கத்தவர்கள் மீதும் கட்சியானது யாப்பு விதிகளிற்கமைவாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும். 

அதனை தொடர்ந்து அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்களா? இல்லையா? என்பது தொடர்பில் கட்சி தீர்மானிக்கும் என்று குறித்த அறிக்கையில் உள்ளது.


No comments

Powered by Blogger.