நளினி-முருகன் உடல்நிலை பாதிப்பு

வேலூர் சிறையில் முருகன்-நளினி தொடர்ந்தும் உணவு ஒறுப்புச் செய்வதால்  அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  இருவரின் உடல் நிலையையும் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள்சிறையிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 

சிறையிலுள்ள முருகனை சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாகக் கூறி நளினி கடந்த 26 ஆம் திகதி முதல் தொடர்ந்து உணவு ஒறுப்புச் செய்து வருகிறார்.  

அதேபோல் தன்னைத் தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாகக் கூறி முருகனும் இன்று 18 ஆவது நாளாக உணவு ஒறுப்புச் செய்து வருகிறார்.

இவர்கள் தொடர்ந்து உணவு ஒறுப்புச் செய்வதால்,  அவர்களது உடல்நிலை மிகச் சோர்வாகவுள்ளதாகத் தெரிவித்த மருத்துவர்கள் இருவரின் உடல் நிலையையும் கண்காணித்து வருகின்றனர்.

தொடர்ந்து அவர்கள் உண்ணாமல் இருப்பதால் மிகவும் சோர்வாக உள்ளனர். இதனால் நேற்று முதல் இருவருக்கும் குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. 

இன்று காலை மருத்துவர்கள் முருகன்-நளினிக்கு குருதி அழுத்தம், சர்க்கரை அளவு குறித்தும் பரிசோதனை செய்தனர். 

தொடர்ந்து 2-வது நாளாக அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் இருவரும் உணவு ஒறுப்பைக் கைவிட  மறுத்து வருகின்றனர்.


No comments

Powered by Blogger.