சஜித்-கோத்தபாயவுக்கு தமிழர்களின் வாக்குகள் கிடையாது

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவாக இருக்கலாம், சஜித் பிரேமதாசவாக இருக்கலாம் இருவருக்குமே தமிழ் மக்களின் வாக்குகள் கிடையாது - இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

மன்னாரில் நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

எங்களுக்கு எதுவுமே தரமாட்டோம் என்கின்றவர்களை நீங்கள் கட்டி அனைக்க முற்படுகின்றீர்கள். கட்டி அணைத்தாலும் பரவாயில்லை அடக்கு முறையாளர்களையும், கொலைகாரர்களையும் ஆதரிக்கின்றார்கள். இரு பகுதியினரும் தாங்கள்தான் அதிக கொலை செய்தோம் என்கின்றார்கள்.

ஒரு பக்கம் கோத்தபாய ராஜபக்ச ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களைப் படுகொலை செய்த கொலையாளி மறு பக்கம் சஜித் என்கின்றவர் கொலைகளை செய்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பேன் என்றார்.

இன்றைய இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை நியமித்ததிற்கு ஐக்கிய நாடுகள் சபை உற்பட சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நான் சவேந்திர சில்வாவைத் தான் தொடர்ந்தும் இராணுவத் தளபதியாக வைத்திருப்பேன் என்கின்றார் சஜித்.

உங்களின் நிலை இதில் யார் சிங்கள பௌத்த வீரன் என்பது தானே தவிர தமிழர்களைப் பற்றி பேச்சில்லை. சிங்கள, பௌத்த வீரன் யார்? முதலிடம் சஜித்திற்காக அல்லது கோத்தவிற்கா? 

தொல்பொருள் திணைக்களத்திற்கு பொறுப்பாகவிருந்து   சஜித் பிரேமதாஸ ஆயிரம் பௌத்த விகாரைகளை வடக்கு கிழக்கிலே கட்டுவேன் என்று கங்கணம் கட்டி செயல் பட்டு வருபவர் அந்த சஜித் பிரேமதாச. 

கடந்த வருடம் வரவு செலவு திட்டத்திலே 2 ஆயிரத்து 990 மில்லியன் ரூபா  நிதியை ஒதுக்கீடு செய்து அந்த அடிப்படையிலே செயல்படுத்துகின்ற சஜித் பிரேமதாச  25 மாவட்டங்களிலும் நூறு அடிக்கு மேற்பட்ட புத்தர் சிலைகளை அமைப்பேன் என்று செல்கின்றார்.

சஜித் பிரேமதாச பௌத்தர்கள் வாளாத மாவட்டங்களில் புத்தர் சிலைகளை வைப்பதன் நோக்கம் என்ன?

இது சிங்கள பௌத்தர்களின் நாடு என்கின்ற நிகழ்ச்சி நிரலிலே செல்கின்ற கோத்தபாயவாக இருக்கலாம், சஜித் பிரேமதாசவாக இருக்கலாம் இருவருக்குமே தமிழ் மக்களின் வாக்குகள் கிடையாது.

தமிழ் மக்களின் உள்ளக் கிடக்கைகளை சர்வதேசத்திற்கும், தென்னிலங்கைக்கும் சரியாக கிடைக்கக்கூடிய விதத்திலே தமிழ் மக்களின் பொது வேட்பாளராக நிற்கின்ற எனக்கு மீன் சின்னத்திலே வாக்களியுங்கள்-என்றார்.


No comments

Powered by Blogger.