துயிலும் இல்லப் பணிகளை நிறுத்தாவிடில் கைது - அச்சறுத்தும் ராணுவம்

மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற சிரமதானப் பணிகளைத்  தடுத்து நிறுத்தாவிடில் கைது  செய்ய நேரிடும் என மாவீரர் குடும்பங்களை இராணுவம் அச்சுறுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் அம்பாறை - கஞ்சிச்குடிசாறு பகுதியில் இன்று காலை நடந்துள்ளது.

கார்த்திகை 27 மாவீரர் தின நிகழ்வுகளின் முன்னேற்பாடுகள் முன்னிட்டு சிரமதானப் பணிகள் தாயகப் பகுதியில் உள்ள மாவீரர் துயிலும் இல்ல மீழ் நிர்மாணிப்பு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல மீழ் நிர்மாணிப்பு  குழுவின் தலைவர் நாகமணி கிருஷ்ணபிள்ளை  கூறுகையில்

கார்த்திகை 27 தாயக விடுதலைக்கான ஆகுதியான மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் முகமாக இவ் முன்னேற்பாடுகள் இவ் வருடமும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க இருக்கிறோம்.

இதனால், இன்று சிரமதானப் பணிகளை முன்கொண்டு செல்கிறோம். ஆனால் இராணுவத் தரப்பு அங்கு வந்து சிரமதானப் பணிகளை இடை நிறுத்த கோரினர். இல்லையேல் கைது செய்து கொண்டு செல்ல நேரிடும் என்றும் அச்சுறுத்திச் சென்றனர். 

அதன் பின்னர் இரண்டாவது தடவையாக அதே இராணுவத்தினர் சிரமதானப் பணி  மேற்கொள்ளும் அனைவரையும் புகைபடம் எடுக்க வேண்டும் என்றனர். அத்தோடு தங்களது சுய விபரத்தையும் வழங்குமாறு கோரினர்.

இதனை மறுத்த பின்னர் இவற்றைப் பதிவு செய்த ஊடகவியலாளரின் அடையாள அட்டையை பரிசோதனை செய்து அட்டையை புகைப்படம் எடுத்து  அங்கிருந்து அகன்று சென்றனர்.

தமிழர் தாயகப் பகுதிகளில் கார்திகை 27  புனித நாளாகவும் அன்று  மாவீரர்களை வணங்க இந்த அரசும் இராணுவத்தினரும் தடுத்து வருவது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

சர்வதேசமும் , இலங்கை அரசும் அனுமதியளித்த பின்னரும் இராணுவமும் , புலனாய்வுப் பிரிவும் தடுப்பதேன் என அங்கு இருந்த மாவீரர்களின் கண்ணீர் மல்க எம்மிடம் தெரிவித்தனர்- என்றார்.

No comments

Powered by Blogger.