தவிசாளரின் காதை கடித்து துப்பிய மர்மநபர்

ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்திய மர்ம ஆசாமியிடம் நியாயம் கேட்ட தவிசாளரின் காதை கடித்து துப்பினார். தப்பி ஓட முயன்ற மர்ம ஆசாமியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஹாங்காங்கில் சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி தொடர்ந்து 6  மாத காலமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அரசுக்கு எதிரான இப் போராட்டத்தில் அடிக்கடி வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறுகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹாங்காங்கின் டாய் ஹூ மாவட்டத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் போராட்டக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்த நபர் திடீரெனக் கத்தியை எடுத்து, போராட்டக்காரர்களை சரமாரியாகக் குத்தினார். 

இதில் இரு பெண்கள் உள்பட  நால்வர் குருதி வெள்ளத்தில் சரிந்தனர்.

இதையடுத்து, போராட்டக்காரர்களுடன் வணிக வளாகத்துக்கு வந்திருந்த உள்ளூராட்சி தவிசாளர் சியு காயின், தாக்குதல் நடத்திய மர்ம ஆசாமியை மடக்கி பிடித்து, அவரிடம் நியாயம் கேட்டார். 

ஆத்திரம் அடைந்த மர்மநபர் தவிசாளரின் காதைக் கடித்து, துப்பினார்.  வலியால் அலறிய தவிசாளர் உடனடியாக   மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதற்கிடையே தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓட முயன்ற மர்ம ஆசாமியை பொதுமக்கள் பிடித்து, தர்மஅடி கொடுத்து, பொலிஸில் ஒப்படைத்தனர். 

அவர் சீன ஆதரவாளராக இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.


No comments

Powered by Blogger.