மைத்திரிக்கு அநுரகுமார திசாநாயக்க கண்டனம்

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட மரண தண்டனைக் கைதிக்கு மன்னிப்பு வழங்குவதற்கான ஜனாதிபதியின் முடிவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

பண ஆட்சியின் செல்வாக்கு காரணமாக அடிப்படை ஜனநாயக கொள்கைகளை சவாலுக்குட்படுத்தும் அழிவுகரமான ஊழல் நிறைந்த ஆட்சியின் விளைவை அனுபவித்து வருகிறோம்.

இலங்கை வரலாற்றில் கொலைக் குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது இது முதல் முறை அல்ல.

நாட்டில் ஒழுக்கமான சமுதாயத்தை கட்டியெழுப்புவதில் சட்ட விதி ஒரு முக்கியமான தூணாகும் என நான் நம்புகிறேன்.

ஜனாதிபதி தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலையீடும் வேண்டும்.

ராஜகிரியாவில் உள்ள ரோயல் பார்க் வீட்டு வளாகத்தில், யுவோன் ஜோன்சன் என்ற 19 வயதான சுவீடன்-இலங்கை வம்சாவளி யுவதியொருவர் ரோயல் பார்க் என்ற அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கீழே தள்ளி விழுத்திக் கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்ட யுவதியின் சகோதரியின் காதலன் ஜூட் ஸ்ரீமந்த ஜெயமஹவே இந்தக் கொலையை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 12 வருட கால சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இதனையடுத்து குற்றவாளி சார்பாக மேன்முறையீடு செய்யப்பட்டபோதும் அவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த மரணதண்டனைக் குற்றவாளிக்கு பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்வதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது - என்றுள்ளது.



No comments

Powered by Blogger.