கோத்தபாய வெற்றிபெற்றால் செல்லாக் காசாகும் சிறுபான்மையினர்

இனவாதிகள் சார்ந்துள்ள வேட்பாளர் வெற்றி பெறுவாரானால் இனிவரும் காலங்களில் சிறுபான்மையினரின் வாக்குப் பலம் செல்லாக் காசாகிவிடும் - இவ்வாறு தெரிவித்துள்ளார் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்.

புல்மோட்டையில்   சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

சிறுபான்மையினரில் அதி பெரும்பான்மையானோர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர். எனினும், தேர்தலில் பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ வெற்றிபெறுவாராக இருந்தால் நமது வாக்குகள் பெறுமதி இல்லாததாகவும் நமது சமூகத்திற்கு பாதுகாப்பு இல்லாதாகவும் தொடர்ந்தும் கால காலமாக அச்சத்தில் வாழும் சூழலும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. 

வாக்களிப்பில் நாம் பொடுபோக்குத்தனமாக இருந்து விடாமல் வாக்களிப்பு வீதத்தைக் கூட்ட வேண்டும். ஒட்டகத்திற்கோ அல்லது மூன்றாவது அணியினருக்கோ வாக்களிப்பதன் மூலம் கோத்தபாயவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கவே செய்யும்.

”சிறுபான்மை வாக்குகள் எங்களுக்கு தேவையில்லை” எனத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் கொக்கரித்துத் திரிந்த இனவாதிகள் இப்போது அவர்களது ஏஜெண்டுகளை அனுப்பி சிறுபான்மை மக்களின் வீட்டு வாசலை தட்டுவதிலிருந்து தீர்மானிக்கும் சக்தி சிறுபான்மையினர் என்பதை அவர்கள் சரியாக  இப்போது புரிந்துள்ளனர்.

சாய்ந்தமருதுவில் சஹ்ரானின் கும்பலை காட்டிக்கொடுத்து பயங்கரவாதத்தின் மூலவேரை பிடுங்கி எறிவதற்கு அவர்கள் வழங்கிய  அனைத்து ஒத்துழைப்புக்களும் எடுத்துக்காட்டு. 

எனினும் இந்த தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீதும் அரசியல்வாதிகள் மீதும் புத்திஜீவிகள் மீதும் அடுக்கடுக்காக போலியான குற்றங்களும் பழிகளும் சுமத்தப்பட்ட போதும், இனவாதிகளின் அத்தனை முயற்சிகளும் தவிடுபொடியாகின.

முஸ்லிம் சமூகம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறுபான்மை மக்களின் வாக்குகள் ஒவ்வொன்றும் பெறுமதியானவை. எனவே சஜித் பிரேமதாசவுக்கு நமது வாக்குகளை வழங்கி அவரது வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும்-என்றார்.


No comments

Powered by Blogger.