மருத்துவரை தாக்க முயற்சி ; மருத்துவ சேவைகள் முடக்கம்

வவுனியா புளியங்குளத்தில் பிரதேச மருத்துவமனை மருத்துவரை  ஒருவர் தாக்க முயற்சித்தமையினால் மருத்துவ சேவைகள் முடங்கியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரவு புளியங்குளம் மருத்துவமனையில் கடமை புரியும் பெண் மருத்துவரை இனந்தெரியாத ஒருவர் தாக்க முயற்சித்துள்ளார்.

இதனால் அச்சமடைந்த  மருத்துவர் கூக்குரல் எழுப்பவே குறித்த நபர்  தப்பியோடியுள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன்னரும் புளியங்குளம் மருத்துவமனையில் மருத்துவருடன் சிலர் முரண்பட்டு தாக்க முற்பட்ட நிலையில் பொலிஸார் அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் பிணையில் விடுவித்திருந்தனர்.

இந்த நிலையில்,  மருத்துவர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டமையினால் குறித்த மருத்துவர் தொடர்ந்தும் அங்கு பணியாற்ற அச்சுறுத்தல் உள்ளமையினால்  அங்கிருந்து  வெளியேறியுள்ளார்.

விடயம் தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகளிடம் கேட்டபோது மருத்துவர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ள முற்பட்டமையினால் மருத்துவரை நாம் அங்கு கடமையாற்றுவதிலிருந்து வெளியேற்றியுள்ளோம்.

நாம் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டு  மருத்துவ சேவையை புளியங்குளத்தில் மேற்கொள்ளாதுள்ளோம். எதிர்வரும் காலங்களில் அச்சுறுத்தல் நிலைமைகள் தொடராது என்பதனை எமக்கு உறுதிப்படுத்த வேண்டும் என்றனர்.



No comments

Powered by Blogger.