மழைகால நோய்கள் ; எப்படி விரட்டுவது,,,,

மழைகாலம் ஆரம்பித்து விட்டாலே போதும், நோய்களும் போட்டி போட்டக்கொண்டு நம்மில் தொற்றிவிடும்.

இந்த மழைக்கால நோய்கள் குறித்தும் அதன் தன்மை குறித்தும் அறிந்து கொண்டால் நோய்கள் வரும் முன் தடுக்கலாம். நோய் வந்த பின் உரிய சிகிச்சையுடன் பாதுகாப்பாகவும் இருக்கலாம் அல்லவா.

குளிர் காலத்தில் குழந்தைகள், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படவாய்ப்பு உள்ளது. வீதிகளில் தேங்கும் மழைநீர் மற்றும் கழிவுநீர் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மழைக் காலங்களில் எச்சரிக்கையாக இருப்பது எப்படி? 

டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா,  மற்றும் கொலரா, வாந்தி பேதி, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மூட்டுவலி , சீதபேதி, சொறி, சிரங்கு,  சளி, தும்மல், இருமல், அலர்ஜி என்று பல தொற்றுநோய்கள் நம்மைத் தாக்கும்.

ஊட்டச்சத்து குறைந்தவர்கள், நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்தவர்கள் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால்தான் மழைக்காலத்தில் நோயால் அவதிப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

மழைக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் பார்க்கலாம்

மழை மற்றும் குளிர்காலத்தில் செரிமானம் சற்று மந்தமாக இருக்கும். இதனால், காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்

குளிர்ந்த தரையில் நடக்கும்போது செருப்பு அணிய வேண்டும். மிதமான மூட்டு பயிற்சிகள் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் செய்தல் நன்று.

மூட்டுக்களில் வலி அதிகம் ஏற்பட்டால் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.  

பல்வேறு நோய்களுக்கு அடிப்படைக் காரணமாக குடிதண்ணீரே இருந்து வருகிறது. எனவே குடி தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து ஆறிய பின் அருந்த வேண்டும். 

பழைய உணவுகள், குளர்ச்சியான உணவு வகைகளை மழைகாலத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது. திரவ உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்

நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அழித்தல் சிறந்தது. சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். வீட்டிலும் வீட்டைச்  சுற்றியும் தண்ணீர் தேங்கவிடக் கூடாது. வீட்டைச்சுற்றி அவ்வப்போது பிளீச்சிங் பவுடர் தூவி சுத்தமாக வைத்திருக்கலாம்.

குளிர்ந்த நேரங்களில்  வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் செல்ல நேரிட்டால் காதுகளில் பஞ்சு வைத்துக்கொள்வது சிறந்தது.

காய்ச்சலோ, சளியின் தாக்கமோ இருந்தால், ஆரம்பகட்டத்திலேயே அருகில் உள்ள மருத்துவரை அணுகி தங்களை முழுமையாக பரிசோதித்து கொள்வதுடன் தேவையான சிகிச்சை பெறுவது நல்லது.

செயற்கை இரசாயனங்கள் கலந்த கொசுவத்தி, கொசுவத்தி திரவம் போன்றவற்றைத் தவிர்த்து, முடிந்தவரை மாலை நான்கு மணிக்கெல்லாம் ஜன்னல்களைப் பூட்டி, கொசுக்களை வீட்டுக்குள் வரவிடாமல் தடுப்பதே சிறந்த வழி.

இவற்றை நாமும் பின்பற்றினால்  மழை காலங்களில் நோயின்றி நலமாக வாழலாம்.


No comments

Powered by Blogger.