இராணுவத்தை ஈடுபடுத்தியவர்களுக்கு மக்கள் பதிலடி

சாய்ந்தமருது தாக்குதலில் இராணுவத்தை ஈடுபடுத்தியவர்களுக்கு மக்கள் பதிலடி கிடைக்கும். கல்முனை மாநகர சபை சுயேச்சை குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம் அஸீம் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் கலந்து கொண்ட கூட்டத்தின் ஆரம்பத்தில்  இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் சனிக்கிழமை இரவு  சாய்ந்தமருதில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உப பொலிஸ் அத்தியட்சகர் என்பவர்கள் சாய்ந்தமருது பிரதேச பிரதிநிதிகள், மற்றும் பள்ளிவாசல் சங்கத்தினர், சிவில் அமைப்பினர் அழைத்து வெள்ளிக்கிழமை காலை  அவசர கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த கூட்டத்தில் உரையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் சாய்ந்தமருது பிரதேச மக்களது ஒற்றுமை பாராட்டத்தக்கது. என்றதுடன் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் மாளிகைக்காடு ஜூம் பள்ளிவாசல் இரண்டும் இணைந்த பொதுமக்களுக்கு விடுத்திருந்த  அறிவித்தலில் வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதேசத்தில்  இடம்பெற இருக்கின்ற பொதுக்கூட்டத்தில் எந்த விதமான அசம்பாவிதங்களையும் செய்யக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தனர்.


இருந்தபோதிலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் சந்திக்கச் சென்ற வேளை பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் கைகளைத் தட்டிவிட்ட சம்பவமானது அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது வெறுப்பை உண்டு பண்ணுவதாய் அமைந்தது.

உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாத சில மருதூர் மக்கள் அசம்பாவிதங்களை மேற்கொள்ள தயாரான நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது பிரதிநிதியான, முன்னாள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிநிதியாகவும் இருந்த ஜெமீல் என்பவர் பள்ளிவாசல் பிரதேசத்தில் இராணுவத்தினரை வரவழைத்து ஜமீலின் அடியாட்களால் வீதியோரங்களில் நின்று இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் சி சி டி கமராக்களிலும் பதிவாகியுள்ளது.

இவ்வாறான கோழைத்தனமான செயல்கள் செய்தும் நாங்கள் எதுவிதமான இடையூறுகளும் அந்த பொதுக்கூட்டத்துக்கு விளைவிக்கவில்லை. 

மருதூர் மக்களின் தேவை எங்களுக்கான தனி பிரதேச சபையாகும். எங்களது தனிப் பிரதேச சபை குறித்து நாங்கள் முதலில் சந்தித்தது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆகும்.  ஆனால் சிறிகொத்தாவிலும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை சந்திப்பதற்கு எமக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை சந்திக்க வேண்டுமாக இருந்தால்    அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அனுமதியை பெற்றுக் கொண்டு வாருங்கள். என்று எங்களை திருப்பி அனுப்பினார்கள். 

அடுத்தபடியாக தான் எங்களது பிரதேசசபை தொடர்பில் நாங்கள் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்தோம். அவர் எங்களது கோரிக்கைகள் தொடர்பில் செவிசாய்த்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் எங்களுக்கான தனிப் பிரதேச சபையை ஏற்படுத்தி தருவதாக உறுதிமொழி அளித்தார்கள் என கூறினார்.

அசம்பாவிதம் நடைபெற்ற தினமன்று குறித்த கூட்டத்தில் மருதமுனை, கல்முனை ,நற்பிட்டிமுனை ,நிந்தவூர் ,சம்மாந்துறை போன்ற வெளியூர்களில் இருந்து அழைத்துவரப்பட்டவர்களே இக்கூட்டத்தில் பங்கேற்றதாகவும் சாய்ந்தமருது மக்கள் எவரும் அக்கூட்டத்தில் முழுமையாக பங்கேற்கவில்லை. என ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ஏனைய உறுப்பினர் குற்றம் சாட்டினார்.


No comments

Powered by Blogger.