த.தே.கூ.தீர்மானத்தை விமர்சிப்பது பாதகமாக அமையலாம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்தை விமர்சிப்பது என்பது எங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நாம் பெரும்பான்மை மக்களுக்கு கூறும் செய்தியாக மாறிவிடும் இது எதிர்காலத்தில் எங்களுடைய தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு பாதகமாக அமையலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்.

கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் ஒரு சில கட்சிகள் அவர்களை விமர்சிப்பது தொடர்பாக ஊடகங்களுக்குகருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அவர் தெரிவித்ததாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியான முடிவுகளை எடுக்கும்போது ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் மிகவும் சிந்தித்து ஆராய்ந்து கலந்துரையாடலின் பின்பே தீர்மானங்களை மேற்கொண்டிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக எடுக்கப்பட்ட முடிவானது அவர்கள் நீண்ட ஒரு கலந்துரையாடல் மற்றும் இரு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் உட்பட கடந்த காலங்களில் அவர்களுடைய செயற்பாடுகள் ஆகிய விடயங்களைக் கருத்தில் கொண்டே  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற தலைவர்கள் அவர்களுடைய அரசியல் அனுபவம் கடந்த கால அனுபவங்களை கொண்டே தீர்மானங்களை எடுக்கின்றார்கள்.

 அவர்களை வெறுமனே அரசியலுக்காக விமர்சனம் செய்வதோ அல்லது சேறு பூசுவதோ தவறான அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் வடகிழக்கில் இருக்கின்ற பல அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தங்களுக்குள்ளே முரண்பட்டுக் கொண்டு பெற்றுக் கொண்டது என்ன? இதன் மூலம் நாம் பாரிய இழப்புகளையே சந்தித்திருக்கின்றோம். 

நாம் ஒற்றுமையை இழந்ததன் காரணமாக பல இழப்புகளையும் பொருளாதார கலை, கலாச்சார ரீதியாகவும் நாங்கள் பின்னடைவை சந்தித்திருக்கின்றோம் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் ஒற்றுமையாக செயற்பட்டதன் காரணமாக பல்வேறு விடயங்களை சாதித்திருக்கின்றது.

அவசர அவசரமாக எடுக்கப்படுகின்ற தீர்மானம் நிலையானதாக இருக்காது. அதிலும் எந்த தலைவர் வெற்றி பெற்றால் அதனை பேச்சுவார்த்தை மூலமாக பெற்றுக் கொள்ள முடியும் என்பதையும் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வெறுமனே தங்களுடைய அரசியல் சுய இலாபத்திற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பது பொருத்தமான ஒரு விடயம் அல்ல. 

இந்த தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களில் ஒருவரே வெற்றி பெறப் போகின்றார் அதில் சிறந்தவர் யார் என்பதையே நாம் தீர்மானிக்க வேண்டும். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்தை விமர்சிப்பது என்பது எங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நாம் பெரும்பான்மை மக்களுக்கு கூறுகின்ற ஒரு செய்தியாக மாறிவிடும் இது எதிர்காலத்தில் எங்களுடைய தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கு பாதகமாக அமையலாம்.

அந்த வகையில் வடகிழக்கில் இருக்கின்ற ஏனைய கட்சிகள் சிந்தித்து செயற்பட வேண்டும். ஏனெனில் தேர்தலில் போட்டியிடுகின்ற வேறு எந்த ஒரு வேட்பாளரும் வெற்றி பெறப் போவதில்லை.

வெற்றி பெறுகின்ற ஒருவரை நாம் ஆதரித்து எங்களுடைய அபிவிருத்தியையும் உரிமைகளையும் ஜனநாயக ரீதியில் பிரிக்கப்படாத இலங்கைக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் -என்றார்.


No comments

Powered by Blogger.