தீப்பற்றிய கார் ; 9 பேர் உடல் கருகி சாவு

போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்த பரிதாபச் சம்பவம் ஒன்று மெக்சிகோவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவில் குடியேறியவர், ரோனிட்டா. இரட்டை குடியுரிமை பெற்ற இப் பெண்ணுக்கு 4 குழந்தைகள்.

இவர்கள், மெக்சிகோவில் லா மோரா நகரத்தில் கிறிஸ்தவ பழங்குடியின மக்களுக்கான குடியிருப்பில் வசித்து வந்தனர். ரோனிட்டாவுடன் அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவுக்கு வந்த அவரது நெருங்கிய உறவினர்கள் பலரும் அதே குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் அங்கு பவிஸ்ப் நகரில் உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ரோனிட்டா தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் லா மோரா நகரிலிருந்து  .3 கார்களில்  17 பேராகப் பயணம் செய்தனர்.

அவர்களது கார்கள் பவிஸ்ப் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தன. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், ஆயுதம் ஏந்தி வந்த மர்ம கும்பல் அவர்கள் கார்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது.

ரோனிட்டாவும், அவரது குழந்தைகளும் பயணம் செய்த காரின் கியாஸ் டேங்கில் குண்டு பாய ஹாஸ் டேங்க் பலத்த சத்தத்துடன் வெடித்து,  தீப்பிடித்து எரியத் தொடங்கியது. 

அந்தக் காரை தொடர்ந்து ரோனிட்டாவின் உறவினர்கள் வந்த கார்களுக்கும் தீ பரவியது. அனைவரும் அலறி துடித்தனர்.

கோர தாக்குதலில் ரோனிட்டா மற்றும் அவரது 4 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

அதே போல் அவரது உறவினர்கள் நால்வரும் தீயில் கருகி இறந்தனர். 9 பேரின் உடல்களும் அடையாளம் காண முடியாத வகையில் எரிந்து கரிக்கட்டைகள் ஆகின.

ஏனையவர்கள் துப்பாக்கி குண்டு காயங்களுடனும், தீக்காயங்களுடனும் உயிர் தப்பினர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியது, போதைப்பொருள் கடத்தல் கும்பல் என தெரிய வந்துள்ளது. தங்கள் போட்டி கும்பல் பயணம் செய்த கார்கள் என்று நினைத்தே, அந்த கார்கள்மீது துப்பாக்கிச்சூட்டை போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடத்தி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மெக்சிகோ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


No comments

Powered by Blogger.