விட்ட தவறை மீண்டும் செய்து விடாதீர்கள்

வட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விட கூடாது. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலைப் அவர்கள்  புறக்கணித்ததால் தமிழர்கள் பாரிய இழப்புகளையும் பல்வேறு துன்பத்திற்கும் உள்ளானார்கள்- இவ்வாறு தெரிவித்துள்ளார் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன்.

ஹற்றனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார் அவர் தெரிவித்ததாவது,

இத் தேர்தலை சிந்தித்து  தீர்வை பெற்றுக் கொடுக்க கூடிய கீழ்மட்ட மக்களின் வாழ்க்கையை நன்கு உணர்ந்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்பதற்கு முன்வர வேண்டும்.

கடந்த காலங்களில் மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த வேலை நிறுத்தம் திட்டமிட்ட அடிப்படையில் அரசியல் நோக்கத்தை கொண்டதாக இருந்திருக்கின்றது. 

அதற்கு சிறந்த உதாரணம் அரச மருத்துவ சங்கத்தின் உறுப்பினர்கள் கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு மேடையில் வீற்றிருந்தது. இது ஒரு அரசியல் போராட்டம் என்பதை உணர முடிகின்றது.

மக்களின் உயிர்களைப் பணயம் வைத்து இவ்வாறு நடந்து கொள்வது உண்மையான போராட்டங்களை இழிவுப்படுத்தும் ஒரு செயலாகவே கருத வேண்டியிருக்கின்றது.  இதனை பொதுமக்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் கீழ்மட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை புரிந்து கொள்ள கூடிய ஒரு ஜனாதிபதி உருவாகவில்லை என்றே கூற வேண்டும்.

அந்த அடிப்படையில் நீண்ட காலத்திற்கு பின்பு ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச போட்டியிடுவது ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு உட்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி வெற்றியின் விளிம்பில் இருக்கும் இந்த நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கினால் சஜித் வெற்றி உறுதி செய்யப்படும். அந்த முடிவும் வெகுவிரைவில் வெளிவரும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். - என்றார்.




No comments

Powered by Blogger.