இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு ; மூவர் உயிரிழப்பு

இரவு விருந்தில் நுழைந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள்.

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை பெருகி வருகிறது. துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வரக் கடுமையான சட்ட திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்ற குரலும் அங்கு ஒலித்து வருகிறது.

இந்த நிலையில்,  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள லாங் பீச் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் இரவு ஒரு விருந்து நிகழ்ச்சி நடந்தது.

இந்த விருந்தின்போது வீட்டுக்குள் நுழைந்த சிலர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அங்கிருந்தவர்கள் வெளியேற முடியாதபடிக்கு சுட்டுத் தள்ளினர்.

துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்கு துப்பாக்கி குண்டு பாய்ந்து மூவர் குருதி வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர்.

 9 பேர் குண்டு பாய்ந்து தரையில் சரிந்து கிடந்தனர். அவர்கள் 9 பேரையும் மீட்பு படையினர் மீட்டு  மருத்துவமனையில் சேர்த்தனர்.

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த அனைவரும் 20 வயது கடந்த இளைஞர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில்  அந்த நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


No comments

Powered by Blogger.