கோட்டாவை மீண்டும் விவாதத்திற்கு அழைக்கும் சஜித்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது கோரிக்கையை ஏற்று பகிரங்க விவாதத்திற்கு வரவேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

பியகம பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் எமது எதிர்த்தரப்பு வேட்பாளருக்கு விவாதத்திற்கு வருமாறு பகிரங்க அழைப்பை விடுத்தேன். இதனை பல நாட்களுக்கு முன்னரே நாம் அவருக்கு அறிவித்து விட்டோம்.

ஆனால், இதுவரை அவர் இதற்கு பதிலளிக்கவில்லை. ஒருவேலை தனியாக வர அவருக்கு சங்கடமாக இருந்தால், அவருக்கு தேவையானவர்களுடன் தாராளமாக வரலாம் என்றும் அழைப்பு விடுக்கிறேன். என்னுடன் விவாதம் செய்ய அஞ்சத் தேவையில்லை” என மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும் இதற்கு கோட்டாபய ராஜபக்ஷ எவ்வித பதிலையும் வழங்கவில்லை. இதனையடுத்து சஜித் பிரேமதாச முன்வைத்த நேரடி விவாத சவாலை ஏற்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.