படேல் சிலைக்கு மலர் தூவிய மோடி

சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்த தினம் இன்று தேச ஒற்றுமை தினமாக கடந்த 2014-ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நர்மதா மாவட்டத்தில் கேவடியா பகுதியில் எழுப்பப்பட்டுள்ள வல்லபாய் படேலின் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காகப் பிரதமர் மோடி நேற்று குஜராத் சென்றார்.

முன்னதாக, குஜராத் காந்திநகரில் தனது தாய் ஹீராபென்னை சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, அவரிடம் ஆசி பெற்றார். அதன்பின் இன்று காலை கேவடியா பகுதியில் அமைந்துள்ள 182 மீட்டர் உயரமுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு வந்து மலர் தூவி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

அதன்பின் அங்கு குழுமி இருந்த அதிகாரிகள், மாணவர்கள், மக்களிடம் தேசிய ஒற்றுமைக்கான உறுதிமொழியையும் பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

மேலும், குஜராத் போலீஸார், ஜம்மு காஷ்மீர் போலீஸார், மத்திய ரிசர்வ் போலீஸார், எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையையும் பார்வையிட்டார். மத்திய தொழிற்படை பாதுகாப்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தேசியப் பாதுகாப்புப் படையினர் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதை, வீரதீரச் செயல்கள் ஆகியவற்றையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

விமான நிலையங்களில் தீவிரவாதிகள் நுழைந்துவிட்டால் எவ்வாறு அவர்களை எதிர்கொள்வது குறித்து சிஎஸ்ஐஎப் படையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர். அதேபோல, நிலநடுக்கம், எரிவாயு கசிவு போன்ற ஆபத்தான நேரங்களில் எவ்வாறு செயல்படுவது, மக்களை எவ்வாறு காப்பது குறித்து தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் செயல் விளக்கம் அளித்தனர். தீவிரவாதத் தாக்குதலை எவ்வாறு முறியடிப்பது, பதிலடி தருவது குறித்து தேசியப் பாதுகாப்புப் படையினர் அளித்த செயல் விளக்கம் அனைத்தையும் பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.


No comments

Powered by Blogger.