அம்பாறை கிட்டங்கி வீதியில் வெள்ளப்பெருக்கு

அம்பாறையில் பருவ மழை ஆரம்பித்துள்ளமையினால் கல்முனை - நாவிதன்வெளியை இணைக்கும் கிட்டங்கி வீதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்குமாயின் இவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகத்துண்டிக்கப்படும் அபாயமுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழையின் காரணமாக கல்முனையிலிருந்து மத்திய முகாமிற்கு செல்லும் பிரதான பாதையிலுள்ள கிட்டங்கி தாம்போதியின் மேலாக வெள்ளம் அதிகரித்தால் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகுவர் என தெரிவிக்கப்படுகிறது.

கல்லோயா குடியேற்றக் கிராமங்களிலுள்ள மத்தியமுகாம், மண்டூர், சவளக்கடை, சாளம்பைக்கேணி, 6 ஆம் கொளனி, 12 ஆம் கொளனி, 4 ஆம் கொளனி 15 ஆம் கொளனி போன்ற கிராமங்களில் வாழும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை இப்பகுதியால் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கல்முனை – நாவிதன்வெளி பிரதேசத்தை இணைக்கும் கிட்டங்கி வீதிக்கு உரிய பாலங்களை அமைக்குமாறு நீண்டகாலமாக மக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

இம் மக்களின் கோரிக்கைகள் இதுவரை செவிசாய்க்கப்படவில்லை இதனால் பிரதேச மக்கள் விசனமடைந்துள்ளனர்.

இதேவேளை தொடர்ந்து மூன்று தினங்களுக்கும் மேலாக கிழக்கு மாகாணத்தில் கடும் மழை பெய்து வருவதுடன் பல பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments

Powered by Blogger.