பாகிஸ்தான் மண்ணில் விளையாடும் இலங்கை

நீண்டதொரு சர்ச்சைக்கு பிறகு பாகிஸ்தானுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டித் தொடரில் விளையாடுவதற்கு சென்ற இலங்கை கிரிக்கெட் அணி, மீண்டும் அங்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் வீரர்களுக்கு இடையே சுமூகமான பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாத முற்பகுதியில் இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இதற்கிடையில் இந்த இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கான பரிந்துரையொன்றினையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, இலங்கை கிரிக்கெட் சபையிடம் வழங்கியுள்ளது.

இதனை இலங்கை கிரிக்கெட் சபையும் ஏற்றுக்கொண்டதாக தெரிவதால், இத்தொடர் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு, அடுத்த வாரம் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் இது உறுதிசெய்யப்படவுள்ளது.

இத்தொடர் உறுதி செய்யப்பட்டால், இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, டிசம்பர் 11- 15 திகதி வரை ராவல் பிண்டி மைதானத்திலும் 
இரண்டாவது டெஸ்ட் போட்டி, டிசம்பர் 19- 23ஆம் திகதி வரை கராச்சி மைதானத்திலும் நடைபெறும்.

இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக அமையவுள்ளது.

அண்மையில் ஒருநாள் மற்றும் ரி-20 தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.இதில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி, 2-0 என கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை இலங்கை அணி, முழுமையாக கைப்பற்றியது.

எனினும், இந்த சுற்றுப்பயணத்தின் போது சில சர்ச்சையான விடயங்களும் இடம்பெற்றிருந்து. குறிப்பாக சுற்றுப்பயணத்தின்போது இலங்கை வீரர்களின் சுதந்திரம் பெரிதும் பாதிக்கப்பட்டதாக கருத்து நிலவியது. தற்போது இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது போன்ற உறுதி மொழியையும் பாகிஸ்தான் வழங்கியுள்ளதாக தெரிகிறது.

No comments

Powered by Blogger.