தேர்தல் விதிகளை மீறுகிறது ஐக்கிய தேசியக் கட்சி

தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தேர்தல் விதிகளை வெளிப்படையாக மீறி வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜயந்த சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.அரச ஊழியர்களுக்கு சட்டவிரோத நியமனங்களை வழங்குதல், வியாபார நிலையங்கள், வீடுகள் மற்றும் சீமெந்து போன்ற பொருட்களை வழங்குவது உள்ளிட்ட செயற்பாடுகளால் அரசு சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கல்வி அமைச்சால் சட்டவிரோதமாக நியமனங்கள் வழங்கப்படுவதாகவும் குறிப்பாக 1958 பேருக்கு அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதகவும், சுகாதார மற்றும் போஷனை அமைச்சால் 700 உதவியாளர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், அதிபர் பதவிகளுக்காக நடத்தப்பட்ட பரீட்சைகள் மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றில் சித்தியடைந்தவர்களை பட்டியலில் இருந்து புறந்தள்ளி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் 862 பேரின் பெயர்களை உள்வாங்கி புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.இந்த நியமனங்கள் வழங்கும் நிகழ்வு செப்டம்பர் 24 ஆம் திகதி அலரிமாளிகையில் இடம்பெற இருந்த நிலையில், அதனை தேர்தல்கள் ஆணைக்குழு தலையிட்டு இரத்து செய்திருந்தாலும், மஹரகம கல்வியியற் கல்லூரி மற்றும் மஹரகம மத்திய கல்லூரியில் கடந்த ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் குறித்த நியமனங்களை வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு நியமனங்களை வழங்கும் அளவுக்கு தற்போதைய அரசாங்கம் வெட்கமற்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ஜயந்த சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.மேலும், நீர் வழங்கல் சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை அறக்கட்டளை நிறுவனம், சுகாதாரம் மற்றும் போஷனை அமைச்சு, மகாவலி அபிவிருத்தி அமைச்சு மற்றும் வீடமைப்பு மற்றும் கட்டுமான அமைச்சு போன்றவற்றின் இணை நிறுவனங்களான முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு ஆயிரக்கணக்கான முறையற்ற நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவைகள் கடந்த செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் திஸ்ஸமஹராம பிரதேச செயலக பிரிவில் உள்ள வீரவில மைதானத்திற்கு சுமார் 800 குடும்பங்களை வரவழைத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 சீமெந்து மூடைகள் வீதம் 12,000 மூடைகளை அமைச்சர் சஜித் பிரேமதாச வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், சொய்சாபுற அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள 12 வீடுகள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படாமல் வேறு நபர்களுக்கு அதாவது தமது பணியாளர்களுக்கு வழங்கப்படும் நடவடிக்கை தற்போது சஜித் பிரேமதாசவால் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
No comments

Powered by Blogger.