அபிவிருத்தி இல்லை ; அவதியுறும் நாகபடுவான் மக்கள்

மீள் குடியேறி பத்து வருடங்கள் கடந்தும் நாங்கள்  அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதியுறுகிறோம். அரச அதிகாரிகளும் பாராமுகமாக செயற்படுகின்றனர்- இவ்வாறு கிளிநொச்சி பூநகரி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மெசிடோ நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட மக்கள் கருத்து கேட்கும் நிகழ்சி திட்டத்தின்போதே விசனம் பூநகரி, கரியாளை நாகபடுவான் கிராம மக்கள் இதனைத் தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்ததாவது,

யுத்தகாலப் பகுதியில்  சொந்தக் கிராமத்திலிருந்து  வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக பல்வேறு பகுதிகளுக்கு இடம்ப்பெயர்ந்து இறுதியில் கடந்த 2009 ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்ன சொந்த நிலங்களில் மீள்குடியேற்றப்பட்டோம்.

மீள்குடியேறி இன்று 10 வருடங்கள் கடந்தும் எமது அடிப்படைவசதிகள் கூட பூர்த்தி செய்யப்படாமல் இருக்கிறது. அன்றாட வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எமக்கு ஒழுங்கான போக்குவரத்து வசதிகளோ, சுகாதார வசதிகளோ அரசினால் செய்து தரப்படவில்லை. தரம் 5  வரை மாத்திரமே பாடசாலை காணப்படுவதால் 5 ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் 10 கிலோ மீற்றருக்கு மேற்பட்ட தூரம் காட்டுப் பாதைகளால் பயணித்தே பாடசாலைக்கு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

கிராமத்தின் பிரதான வீதி மோசமான நிலையில் காணப்பட்டதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் வீதிக்கு 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கிரவல் மண் சுமார் 2 கிலோமீற்றருக்கு குவிக்கப்பட்டது. எனினும், மூன்று மாதங்கலுக்கு மேலாக பரவப்படாமல் கிரவல் குவிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது

அக் கிரவலை பரவித் தருமாறு பல அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். இதுவரை யாரும் வீதியை சீர் செய்வதில்  அக்கறை எடுப்பதாகத் தெரியவில்லை.

யுத்ததால் பாதிக்கப்பட்ட ஏனைய கிராமக்களை அரசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்தி செய்யும்போது எங்கள் கிராமங்களையும் அபிவிருத்தி செய்ய முயற்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்  

சம்மந்தபட்ட அதிகாரிகள் ஆடம்பர வசதிகளை செய்து தராவிட்டாலும் எமக்கு அடிப்படை வசதிகளான ஆரம்ப சுகாதர நிலையம், வாய்கால் புனரமைப்பு, பிரதான வீதிகள் மற்றும்  போக்குவரத்து போன்ற பொதுவான  வசதிகளையாவது செய்துதர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றோம்-என்றனர்.


No comments

Powered by Blogger.