வெளியேறும் முதலைகள் ; உயிர் அச்சத்தில் மக்கள்

ஆற்றை விட்டு வெளியேறும் முதலைகளால் சாலையில் பயணிப்போர்  அச்சத்துடனேயே  செல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை - காரைதீவு பிரதான வீதி மாவடிப் பள்ளியை ஊடறுத்துச் செல்லும் ஆற்றில் அதிகளவிலான முதலைகள் காணப்படுவதாகவும்  அண்மையில் பெய்த மழையினால் அவை  இரவு நேரங்களில் வெளியேறி வீதிக்கு வருவதாகவும் கூறப்படுகிறது.

சுமார் 9, 5, 4அடி நீளமுடைய முதலைகளே இவ்வாறு வெளியேறுவதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கினறனர்.

 கிட்டங்கி, அன்னமலை, மாவடிப்பள்ளி, இறக்காமம், சின்ன முகத்துவாரம், சாகாமக்குளம், கஞ்சி குடிச்சாறு, தாமரைக்குளம், பொத்துவில் களப்புக்கள் போன்ற இடங்களிலும் முதலை அச்சறுத்தல் தொடர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

வாவிகள் மற்றும் குளங்களில் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன்போது ஆடு, மாடு, நாய் போன்ற வளர்ப்பு பிராணிகளையும் உணவாக்கிக்கொள்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

முதலை அபாயம் தெரியாமல் மீனவர்களும் சுற்றுலாப்பயணிகளும் வாவிகளிலும்  குளங்களிலும் பயணிப்பதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியமுள்ளது. 

அண்மையில் இலங்கைக்கு வருகைதந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் பொத்துவில் ஆற்றில் இறங்கியபோது முதலைக் கடிக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். 

இதேபோன்று நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் சிலரும் முதலைக் கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்கள்.

கடந்த வருடம் கைகழுவச் சென்றபோது பொத்துவில் பானமையில்  பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவர் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக  மீட்கப்பட்டிருந்தார்.

இதனைக் கட்டுப்படுத்த வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் என்பன பொதுமக்கள், மீனவர்கள், சுற்றுலாப் பயணிகளின் நன்மைகருதி திட்டங்கள் வகுத்து செயற்படவேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments

Powered by Blogger.