உரிய நடவடிக்கைகள் இல்லையேல் பகிஷ்கரிப்பு தொடரும்

தாக்குதல் சம்பவத்துடன் ஈடுபடடவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்காது விட்டால் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு தொடரும்-இவ்வாறு சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தடை உத்தரவை மீறி செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில்  கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. 

இதன் போது பொதுமக்கள் மீதும் சட்டத்தரணிகள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவங்களைக் கண்டித்து மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்றைய தினம் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர். இதன்போது கருத்துத் தெரிவிக்கம்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

இந்த  சம்பவங்கள் உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய விடயம். இந்து ஆலய வளாகத்திற்குள் அல்லது அதற்கு அருகாமையிலோ இவ்வாறான மனித உடல்கள் எரிக்கப்படுவதோ அல்லது புதைக்கப்படுவதோ இல்லை. ஆனால் நீதிமன்ற கட்டளையையும் மீறி புத்த பிக்குவின் உடல் தீத்தக்கேணிக்கு அருகாமையில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

உண்மையில் தென்பகுதியில் இருக்கும் சிங்கள மக்களும், இலங்கையில் இருக்கும் அனைத்து மக்களும் அறிந்து கொள்ள வேண்டிய விடயம் புத்த மத குருமாரின் உடல்களையோ அல்லது சிங்கள மக்களின் உடல்களையோ அடக்கம் செய்வதற்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை.

ஆனால் இந்து ஆலயத்திற்கு அருகாமையில் அல்லது தீத்தக்கேணியில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டமையைக் கண்டித்தே எமது பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளோம்.

சட்டத்தரணிகளையும் பொது மக்களையும் தாக்கியவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். நீதிமன்றம் வழங்கிய கட்டளை தொடர்பில் தெரியப்படுத்தியதோடு, அருகாமையில் இருந்த பொலிஸாருக்கும் தெரியப்படுத்தியிருந்தார்கள்.

ஆனால் அதனை எல்லாம் தமது கவனத்தில் எடுக்காது அடாவடியான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் சம்பவத்துடன் ஈடுபடடவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். உரிய நடவடிக்கைகள் எடுக்காது விட்டால் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு தொடரும்-என்றார்.


No comments

Powered by Blogger.