காதலை சொன்னதும் உயிர் விட்ட காதலன்

கடலுக்கு அடியில் காதலை சொன்ன காதலன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது.

பேடன் ரூஜ் நகரை சேர்ந்தவர் ஸ்டீவன் வெபர். இவரது காதலி கெனிஷா ஆன்டோயினி. இவர்கள் இருவரும் தான்சானியா நாட்டில் உள்ள பெம்பா தீவுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். 

அவர்கள் அங்கு கடலில் நீருக்கு அடியில் 32 அடி ஆழத்தில் உள்ள மாண்டா எனப்படும் விடுதியில் தங்கியுள்ளனர். அப்போது ஸ்டீவன் வெபர், தனது காதலியிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ள முடியுமா என்பதை கவித்துவமாகக் கேட்க விரும்பினார்.

இதற்காக தண்ணீருக்குள் இறங்கிய ஸ்டீவன் வெபர் தான் கைப்பட எழுதிய ஒரு காதல் கடிதத்தையும், திருமண மோதிரத்தையும் கண்ணாடி வழியாக விடுதிக்குள் இருந்த தனது காதலியிடம் காட்டினார். அந்த கடிதத்தில் அவர் “உன்னைப் பற்றி நான் விரும்பும் அனைத்தையும் உன்னிடம் சொல்லும் அளவுக்கு என்னால் மூச்சு விட முடியாது. ஆனால் நான் உன்னைப் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறேன், ஒவ்வொரு நாளும் நான் அதிகமாக நேசிக்கிறேன்” என எழுதியிருந்தார். 

தனக்காக தண்ணீருக்கு அடியில் காதலர் செய்யும் கவித்துவ செயல்களை கெனிஷா ஆன்டோயினி ஆனந்த கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக ஸ்டீவன் வெபர் தண்ணீரில் மூழ்கினார். விடுதி ஊழியர்கள் அவரைக் காப்பாற்றுவதற்காக உடனடியாக தண்ணீருக்குள் இறங்கினர். எனினும் அதற்குள் ஸ்டீவன் வெபர் மூச்சுத் திணறி உயிரிழந்து விட்டார்.

இந்த தகவலை புகைப்படங்களுடன் பேஸ்புக்கில் பதிவிட்ட காதலி கெனிஷா ஆன்டோயினி தன் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான ஒரு நாள் துயரத்தில் முடிந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். No comments

Powered by Blogger.