தேரரின் செயற்பாட்டைக் கண்டிக்கிறேன் கே.என். டக்ளஸ்

நீதிமன்ற உத்தரவை மீறியும், முல்லைத்தீவு மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், தேரரின் உடலை தீர்த்தக் கரையில் எரித்ததை வன்மையாக கண்டிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கண்டனம் தெரிவித்தார்.

முல்லைத்தீவு செம்லை நீராவியடி பிள்ளையார் கோவில், வளாகத்தில் உயிரிழந்த தேரரின் உடலை எரிப்பதற்காக தென்னிலங்கை தேரர்கள் மற்றும் ஞானசார தேரர்கள் முனைந்ததும், நீதிமன்ற தீர்ப்பை மீறி தேரரின் உடலை எரித்தமை மிகவும் தவறான ஒரு விடயம்.முல்லைத்தீவு மக்களின் உணர்வுகளை புண்படுத்த கூடிய வகையில், செயற்பட்டதும் தவறான விடயம். ஆகையினால், இவ்வாறான விடயங்களை வன்மையாக கண்டிப்பதுடன், நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது, தேரரின் பூதவுடல் எரிக்கப்பட்டமை தொடர்பாக கேள்வியெழுப்ப உள்ளேன் என்றார்.

அத்துடன், முல்லைத்தீவு சம்பவத்தின் பின்னர், ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு முல்லைத்தீவு மக்கள் வலியுறுத்துகின்றார்கள்., அவரை கைதுசெய்ய பாராளுமன்றத்தில் வலியுறுத்துவீர்களாக என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளிக்கையில், பத்திரிகைகளுக்காக கதைப்பது என்பது ஒன்று உள்ளது. அதனைத் தான் தமிழ் பிரதிநிதிகள் அங்கு செய்கின்றார்கள். ஆனால், எமது செயற்பாடு, நாங்கள் எதை முன்வைக்கின்றோமே, எதைப் பேசுகின்றோமோ, அதை வெளிப்படுத்துவதும், அதற்கு நடவடிக்கை எடுப்பதுமே எமது நோக்கம்.

தொல்பொருள் திணைக்களம் சஜித் பிரேமதாசவிற்கு கீழே உள்ளது. ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர், சஜித் பிரேமதாசவிற்கு அழுத்தங்களைக் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவில் பிரச்சினையும், தொல்பொருள் திணைக்களத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளே, நான்கரை வருடங்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னத்தை செய்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

அவற்றையே பாராளுமன்றில் கேள்வி கேட்கவுள்ளேன். பாராளுமன்றில் கேள்வி கேட்டால், ஆட்சியாளர்கள் பாராளுமன்றில் இருப்பதில்லை. ஆளும் கட்சி என்று சொல்லும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பணப்பெட்டி அரசியலே செய்கின்றவர்கள். மக்களின் பிரச்சினைகளை தீராத பிரச்சினையாக வைத்திருக்க வேண்டுமென்று எண்ணுகின்றவர்கள். கொள்ளை தான் அவர்களின் கொள்கை என்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
No comments

Powered by Blogger.